
விண்டோஸ் சிஸ்டத்தில் ரெஜிஸ்ட்ரி என்பது விண்டோஸ் இயக்கத்தின் மூளை அல்லது முதுகெலும்பு என்று சொல்லலாம். இங்கு தான் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான குறியீட்டு வரிகள் உள்ளன. எனவே இவற்றில் ஏதேனும் ஒரு சிறிய மாறுதல்களை நாம் மேற்கொண்டாலும், அது இயக்கத்தில் மாறுதலை ஏற்படுத்தும். மாறுதல்கள் தவறாக ஏற்படுத்தப்பட்டால், அது கம்ப்யூட்டர் செயல்படுவதனையே முடக்கிவிடும். எனவே தான் கம்ப்யூட்டர் கட்டமைப்பு குறித்து அறியாமல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள், இதனை ஒரு பயமுறுத்தும் பேய் பங்களா என்று சொல்கிறார்கள்.
ஒரு வழிக்கு அது நல்லதுதான். இருப்பினும் சில நேயர்கள் கேட்டுக் கொண்ட சில கேள்விகளுக்கான விளக்கங்களை இங்கு காணலாம். ரெஜிஸ்ட்ரியைத் திறந்து அதன் குறியீடு வரிகளில் நாம் காண வேண்டிய அல்லது மாற்ற விரும்பும் வரியினைக் கண்டறிவத னைத்தான் நேவிகேட்டிங் தி ரெஜிஸ்ட்ரி (Navigating the registry) எனக் கூறுகின்றனர். இதை மட்டும் இங்கு காண்போம். ஆனால் ரெஜிஸ்ட்ரியில் சென்று அதன் வரிகளை மாற்றுவதாக இருந்தால், முன்பே இந்த இதழ்ப் பக்கங்களில் எழுதியபடி, ரெஜிஸ்ட்ரியை பேக் அப் எடுத்துப் பத்திரமான இடத்தில் பதிந்து வைத்துக் கொள்வது நல்லது.
ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு, கம்ப்யூட்டர் இயங்கா நிலை ஏற்பட்டால், பேக் அப் செய்த பைலை, அதன் இடத்தில் வைத்து இயக்கிக் கொள்ளலாம். முதலில் வாசகர் ஒருவர் குறிப்பிட்டுக் கேட்ட ரெஜிஸ்ட்ரி கீ என்றால் என்ன என்று பார்ப்போம். விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் உள்ள கீ என்பது ஒரு பைல் போல்டர் போல ஒன்றாகும். கீயினுள் உள்ள இன்னொரு கீ, சப் கீ (subkey) என அழைக்கப்படும். கீகள் அனைத்தும், ரெஜிஸ்ட்ரியின் இடது பக்க பிரிவில் மட்டுமே அமைக்கப்படும்.
முதலில் ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் (Registry Editor) திறக்க, விண்டோஸ் கீ+ஆர் (Win key + R) அழுத்தவும். அல்லது Run விண்டோ திறந்து அதில் regedit என டைப் செய்து என்டர் அழுத்தவும். அல்லது ஸ்டார்ட் பட்டனில் இடது கிளிக் செய்து, அதில் கிடைக்கும் சர்ச் பாக்ஸில் regedit என்று டைப் செய்து என்டர் அழுத்தலாம். நீங்கள் இதனை அழுத்துகையில் ரன் காட்டப்படவில்லை என்றால் என்ன செய்வது?
அதனை எப்படி ரெஜிஸ்ட்ரியில் சரி செய்திடலாம் என்பதனை இங்கு காணலாம். ரெஜிஸ்ட்ரியில் நேவிகேட் செய்வதனை ரெஜிஸ்ட்ரி பிரவுசிங் ( “browsing the registry”) எனவும் கூறலாம். இதனை மூடுவதும் திறப்பதும், + (plus symbol) அல்லது -(minus symbol) கீகளை அழுத்துவதன் மூலம் மேற்கொள்ளலாம். நீங்கள் செல்ல விரும்பும் ரெஜிஸ்ட்ரி கீ இருக்குமிடம் அடையும் வரை இந்த இரண்டு கீகளையும் அழுத்திச் செல்லலாம். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்புகளில், இந்த ப்ளஸ் மற்றும் மைனஸ் கீகள் இந்த செயல்பாட்டில் இல்லை. அதற்குப் பதிலாக, கீ அல்லது சப் கீயின் இடது மூலையில் ஒரு சின்ன முக்கோண அடையாளம் இருக்கும். இதில் கிளிக் செய்தால் கீ திறக்கப்படும்.
இந்த சிறிய முக்கோணம் வெண்மை நிறத்தில் இருந்து, வலது பக்கம் திரும்பி இருந்தால், அந்த கீ மூடப்பட்டுவிட்டது என்று பொருள். அதற்குப் பதிலாக, கருப்பாக இருந்து கீழ் நோக்கி இருந்தால், அதில் மேலும் துணை கீகள் இருக்கின்றன; அவற்றைத் திறக்கலாம் என்று பொருள். சரி, அடுத்து விண்டோஸ் திறக்கப் படுகையில், எந்த புரோகிராம்கள் திறக்கப்பட வேண்டும் என்று சொல்கிற ரெஜிஸ்ட்ரி இடத்திற்குச் செல்வோமா! இந்த இடத்திற்குச் செல்ல கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை இட வேண்டும். HKEY_CURRENT_ USER\Software\Microsoft \Windows\CurrentVersion\Run இந்த கட்டளையைக் கொடுத்தவுடன், நீங்கள் குறிப்பிட்ட ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் இருக்கும் இடத்திற்கு இட்டுச் செல்லப்படுவீர்கள்.
இப்போது இந்த விண்டோவில் வலது பக்கப் பிரிவினைப் பார்க்கவும். இதில் ஐந்து பதிவுகள் இருக்கும். இந்த பதிவுகளை “values” என அழைக்கிறார்கள். ஒரு ரெஜிஸ்ட்ரி வேல்யு, அதனைப் பல பார்மட்டுகளில் பதிவு செய்கிறது. இந்த வேல்யூக்களின் அடிப்படையில் விண்டோஸ் இயக்கம் தான் திறக்க வேண்டிய அப்ளிகேஷன்களைத் திறக்கும். இதில் தான் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால், இந்த வேல்யூக்களை மாற்ற வேண்டும். என்ன இவ்வளவு எளிதா, ரெஜிஸ்ட்ரி மாற்றுவது என்று கேட்காதீர்கள். இதில் சரியான, நமக்குத் தேவையான குறியீட்டினைக் கண்டு மாற்றுவதுதான் மிக முக்கியம்.இதில் தவறு ஏற்படவே கூடாது.
Share250
Related Article:
0 comments:
Post a Comment